Friday, May 6, 2011

கொடவாய பட்டினம்

இலங்கையில் பண்டுகாபய மன்னன் அனுராதபுரியில் ஆட்சியமைத்து கிட்டத்தட்ட ஒன்றே கால் நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அதாவது கி.மு. 200 ஆம் ஆண்டளவில் அனுராதபுரத்தின் அப்போதைய அரசன் தேவனம்பியதீசனுடன் ஏற்பட்ட கருத்து மோதல்களின் பின்னர் அவனது தம்பியான மகாநாகனால் உறுகுணை அரசு நிறுவப்பட்டது. தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த அவன் மாகாமம் எனப்படும் இன்றைய திஸ்ஸமகாராம நகரின் அருகிலிருந்த இடத்தைத் தலைநகராகக் கொண்டு தன் ஆட்சியை நிறுவினான். எனினும், முதன்முதலாக அரச மரக்கிளை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது ஜம்புகோளப் பட்டினத்தில் அதனை வரவேற்பதற்காக இந்த உறுகுணைக்கு உட்பட்ட கதிர்காமத்திலிருந்தும் இளவரசர்கள் சென்றதாக மகாவம்சம் கூறுகிறது. அது முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையின் தனித்த அரசாக விளங்கிய உறுகுணை அரசு பௌத்த மதக் கலாச்சாரத்தையும் மிகச் சிறப்பான விவசாயப் பொருளாதாரத்தையும் கொண்டிருந்தது. உறுகுணையின் மிக முக்கிய துறைமுக நகரமான கொடவாய நகரம் இந்து மாக்கடலை நோக்கியதாக வளவே ஆற்றின் மருங்கில் மாணிக்க அகழ்வு பெரிதாக இடம் பெற்ற பகுதியிலேயே அமைந்திருந்தது.
உறுகுணை அரசு நிறுவப்படுவதற்கு முன்னரே நிள்வளா ஆற்றுப் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் காணப்பட்டுள்ளன. வளம் மிக்க நிலத்தைக் கொண்ட இப்பகுதியில் 2300 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கிலே அனுராதபுர அரசு வலி குன்றியிருந்த காலங்களிலும் சோழ, பாண்டிய, கலிங்க அரசுகள் அனுராதபுரம் மீது படையெடுத்த போதும் இந்த உறுகுணை அரசுதான் அனுராதபுரத்தின் மேட்டுக்குடி மக்களுக்கும் மன்னருக்கும் புகலிடம் வழங்கியது. உறுகுணை அரசு தானாக வீழ்ச்சியுற்று அக்காலத்தின் முக்கிய அரசுடன் இணையும் வரை ஒரு காலத்திலும் எந்தவொரு அன்னியப் படைக்கும் அடிபணியாது இறைமையுள்ள தனி நாடாக, அதாவது இராசரட்டையின் துணையரசாக விளங்கியது. அனுராதபுரத்தையும் பொலன்னறுவையையும் கைப்பற்றியிருந்த அன்னிய ஆட்சியாளரைத் துரத்தியடிப்பதற்காக வெளிக் கிளம்பிய இளவரசர் பலரும் இந்த உறுகுணை அரசிலேயே வளர்ந்தனர். அத்தகையோருள் துட்டகாமினி, விக்கிரமபாகு, முதலாம் கஜபாகு, மகா பராக்கிரமபாகு போன்றோர் குறிப்பிடத்தக்கவர்.
திஸ்ஸமகாராம
உறுகுணை அரசு அக்காலத்திலேயே மிகச் சிறந்த தொழிநுட்ப அறிவைக் கொண்டிருந்தது. நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப் படுத்தியமையினாலும் மிக நீண்ட வறட்சிகளுக்குத் தாக்குப் பிடிக்கும் வகையில் குளங்களையும் நீர்த்தேக்கங்களையும் கட்டியமையும் உறுகுணை அரசு பல நூற்றாண்டுகள் அமைதியாக வாழ வழி வகுத்தன. உறுகுணை அரசின் வீழ்ச்சி 13 ஆம் நூற்றாண்டில் நிலவிய மிக நீண்ட வறட்சி காரணமாக மக்கள் ஈரவலயப் பகுதிகளை நோக்கிப் பெருமளவில் இடம்பெயர்ந்தமையாலேயே ஏற்பட்டது. அக்காலத்தில் பன்னிரண்டாயிரம் பௌத்தத் துறவிகள் வாழ்ந்த இடமான சித்துல்பாகுவ என்ற இடமும் கி.மு. 87 இல் கட்டப்பட்ட மகுல் விகாரையும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆகாச சைத்திய என்ற பௌத்தத் தலமும் உறுகுணையின் மாகாமத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளன. ஆண்டு தோறும் 400,000 பௌத்த புனிதப் பயணிகளைக் கவர்ந்திழுப்பனவாக இவ்விடங்கள் இன்று காணப்படுகின்றன.
இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம், ஜெர்மனியின் பொண் பல்கலைக்கழகம், ஜெர்மனிய தொல்பொருளியல் நிறுவனம் என்பன இணைந்து ஏற்படுத்திய 35 பேர் கொண்ட ஆய்வுக் குழு 1994 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வுகளில் இந்த உறுகுணை அரசுக்கு உட்பட்டிருந்த கொடவாய துறைமுக நகரைக் கண்டுபிடித்தனர். பௌத்த ஆலயமாகவும் முதலாம் விஜயபாகு மன்னனின் நிருவாக மையமாகவும் விளங்கிய கொதா பப்பத ரஜ மகாவிகாரை என்னும் பௌத்த ஆலயத்தின் சிதைவுகளை அகழ்வாய்வுகளில் கண்டு பிடித்த மேற்படி குழுவினர், அதற்கு அருகாமையிலிருந்த கல்லொன்றில் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த குறிப்புக்களின் படி கொடவாய நகரம் அக்காலத்தில் முக்கிய கடல்சார் வணிக நிலையங்களில் ஒன்றாக இருந்ததைக் கண்டுகொண்டனர். அவ்வகழ்வாய்வுகளில் சாசானியப் பேரரசு மற்றும் சீனப் பேரரசு என்பவற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட மட்பாண்டங்களும் உரோமப் பேரரசின் நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.
கொடவாய
சீனப் பட்டுக்களை ஏற்றி வந்த கிழக்கத்தியக் கப்பல்களும் மேற்கிலுள்ள அரபு, ஐரோப்பிய, எகிப்திய பகுதிகளிலிருந்து வர்த்தகச் சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களும் இடைத் தங்கல் துறைமுகமான இந்த கொடவாய துறைமுகத்திலேயே தமக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்து அவ்விடத்திலிருந்தே திரும்பிச் சென்றன. அதனாலேயே உறுகுணை அரசு பண்டைக் கால கிழக்கு-மேற்கு வர்த்தகத்தின் மிக முக்கிய நிலையமாகக் காணப்பட்டது.
மகாவம்சத்தில் பன்னிரு மன்னர் எனும் பாடம் இந்த கொடவாய துறைமுக நகர் பற்றிக் குறிப்பிடுகிறது. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “Topographia Christiana” என்ற ஐரோப்பிய நூலும் இலங்கையை பட்டுப் பாதையின் ஒரு முக்கிய கடல்சார் வணிக மையமாகவே குறிப்பிடுகிறது.
அங்கு கடலை நோக்கியிருக்கும் பாறையொன்றில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய பௌத்த துறவு மடமொன்றின் அறமண்டபம் மற்றும் அதில் காணப்பட்ட பல்வேறு புத்தர் சிலைகள் என்பவற்றின் சிதைவுகள் காணப்படுகின்றன. அங்கு காணப்படும் புத்த சிலைகளில் உள்ள நிறப் பூச்சுக்கள் இன்றும் புதுமையாகவே உள்ளது. ஏனெனில், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு காலநிலைத் தாக்கங்களுக்கு உட்பட்டிருந்தபோதும் அவற்றின் நிறப் பூச்சுக்கள் சிறிதும் மங்காமல் இப்போது பூசப்பட்டது போன்று காணப்படுகின்றன.
கல் நங்கூரம்
அத்துறவு மடத்தின் கிழக்குப் புறமாக சுங்கத் திணைக்களத்தின் கட்டிடம் அமைந்துள்ளது. அதில் யானையொன்று தன் தந்தங்களைத் தாமரைப் பூவின் மீது வைத்திருக்கும் படமொன்று காணப்படுகிறது. உறுகுணையின் மன்னனே சுங்க வரியைப் பெறுவோனாயினும், அவ்வரி முழுவதும் மேற்படி ஆலயத்துக்கே வழங்கப்பட்டது. பொருட்களுக்குச் சுங்க வரி விதிக்கப்பட்டமைக்கு ஆதாரமாக களி மண்ணினாலான சிங்க முத்திரையொன்றினால் அடையாளமிடப்பட்டது. அக்கற்பாறைக்குக் கீழ்ப் புறமாக வளவே ஆற்றின் உள்ளகத் துறைமுகம் அமைந்திருந்தது. இந்தப் பண்டைய துறைமுகத்தின் பகுதியாக இருந்த இறங்கு துறை 3.5 மீற்றர் உயரம் வரை கற்றூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. கொடவாய நீர்ப் பரப்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கல்லினாலான பழங்கால நங்கூரமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையில் இதுவரை இவ்வாறான கல் நங்கூரங்கள் நான்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏனைய மூன்றும் காலித் துறைமுகத்தில் காணப்பட்டன. அத்தகைய கல் நங்கூரங்கள் அக்கால அரபு வணிகக் கப்பல்களிலேயே பயன்படுத்தப்பட்டன.
இந்த கொடவாய துறைமுக நகரத்தில் ஏராளமான உரோம நாணயங்களும் காப்புக்களும் வளையல்களும் கண்டெடுக்கப்பட்டன. அக்கால வீடுகளை அலங்கரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சித்திர வேலைகள், மட்பாண்டங்கள் என்பனவும் பெருமளவில் இங்கு காணப்பட்டமை, இப்பகுதி ஒரு காலத்தில் மிகச் சிறந்த பண்பாட்டைக் கொண்டிருந்ததைப் பறை சாற்றுகிறது.
அக்கால உறுகுணை அரசின் தலைநகரான மாகாமம் இப்போது காட்டு நடுவே உள்ளது. உறுகுணை மன்னர்களால் கட்டுவிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான குளங்களும் கால்வாய்களும் யால, குமண, புந்தல, லுணுகம்வெகெர, லாகுகல-கித்துலான, உஸ்ஸங்கொட போன்ற போன்ற தேசிய கானகங்களின் நடுவில் காணப்படுகின்றன. இக்காடுகளின் உட்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன.

உசாத்துணை:
(வலைத்தளங்கள் பார்க்கப்பட்ட நாள்: 2011 மே 06, 16:00 இலங்கை நேரம்)

Sunday, May 1, 2011

பண்டைய சமுதாயங்கள்


இந்த உலகின் பல பாகங்களிலும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மனித நாகரிகத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு கால கட்டங்களிலும் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனரெனக் காட்டுவதற்குரிய சான்றுகள் பலவற்றை அக்காலங்களில் வாழ்ந்த சமுதாயங்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் நாம் அறிந்தவை கொஞ்சம், அறியாதவை ஏராளம்.
பண்டைய பத்ரா நகரின் கருவூலம்

ஒவ்வொரு சமுதாயத்திலும் வாழ்ந்த மானிடக் குழுக்களின் சமுதாய வாழ்வு எவ்வாறு காணப்பட்டது, அவர்கள் தம் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றினர், அவர்களின் ஆட்சி, நிருவாகம் எப்படியிருந்தது, அவர்களது உணவு, உடை மற்றும் கலாசாரம் எவ்வாறு இருந்தது, ஏனைய சமுதாயத்தினருடன் எப்படித் தொடர்புற்றனர், மதம் அல்லது சடங்குகள் எவ்வாறு காணப்பட்டன, அவர்களுடைய பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் எல்லாம் எப்படியிருந்தன என்பவற்றையெல்லாம் மானிட வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் சரிவரப் பதியாத சமுதாயங்கள் ஏராளம் இவ்வுலகில் வாழ்ந்துதானிருக்கின்றன. அஞ்சா நெஞ்சர்களாக, தோள் வலிமை சிறந்தவர்களாக, கடின உழைப்பாளிகளாக அச்சமூகங்கள் காணப்பட்டுள்ளன. பிற்காலத்தில் வந்த கயவர்களாலோ அல்லது அவர்களது சமகாலத்தில் காணப்பட்ட ஆதிக்க வெறியர்களாலோ அவ்வாறான சமுதாயங்கள் பல பூண்டோடு அழிக்கப்பட்டுள்ளன. இயற்கையின் சீற்றமும், தப்பி வாழ்வதற்குப் போதிய அறிவின்மையும், உயிருக்குக் கேடான தொற்று நோய்களும், நீண்ட கால வறட்சி போன்ற காரணங்களால் ஏற்பட்ட பசிக் கொடுமையும் அவ்வாறான சமுதாயங்கள் இவ்வுலகிலிருந்து முற்றிலும் துடைத்தெறியப்படுவதற்கு வேறு காரணங்களாக அமைந்துள்ளன.
மொகெஞ்சோதரோ (பாக்கிஸ்தான்)

அவ்வாறான சமுதாயங்கள் உண்மையிலேயே எப்படியிருந்தன என்பதையெல்லாம் இன்று நாம் காணும் அழிபாடுகள் மூலமே ஓரளவுக்கேனும் அறிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு சமுதாயங்கள் எழுத்து முறைகளைக் கொண்டிருந்தன. எனினும், அவ்வெழுத்துக்களில் ஏராளமானவற்றை எவ்வகையிலும் படித்தறிய முடியாத நிலை இன்றும் காணப்படுகிறது. இத்தரையிலிருந்து துடைத்தெறியப்பட்ட சமுதாயங்களின் வரலாறுகள் இன்றைய சமூகங்களுக்கு மிகச் சிறந்த பாடங்களாகும்.

ஒரு சமுதாயத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்ததாக எதையெல்லாம் நாம் காண்கிறோமோ, அவற்றையெல்லாம் நாம் தவிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனாலேயே புனித குர்ஆனில் இப்படிக் கூறப்பட்டுள்ளது: அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள். – அர்ரூம்: 09. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர் வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன். – ஃபாதிர்: 42.
அல்-ஹிஜ்ர் (சவூதி அரேபியா)

வரலாற்றைக் கற்கையில் நாம் அருஞ் செயல்கள் பலவற்றைக் கண்டு வியக்கிறோம். ஆகா, ஒகோ என்கிறோம். பண்டைக் கால மக்கள் வாழ்ந்த இடங்களை நாம் நேரில் பார்க்க வேண்டாமா என ஏங்குகிறோம். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை உலகின் ஏராளமான பகுதிகள் ஏனையோரால் எளிதாக அடைய முடியாதனவாகவே இருந்துள்ளன. பண்டைய காலத்தில் மனிதரால் அறிந்துகொள்ள முடியாதிருந்த பகுதிகளுக்கு பிற்காலத்தவர் பலர் பிரயாணம் செய்துள்ளனர். பெருங்கடல்களையும் பனிபடர்ந்த மலைகளையும் அடர்ந்த காடுகளையும் சதுப்பு நிலங்களையும் வெப்ப மிகுதியான பாலை நிலங்களையும் உயிர்கொல்லி விலங்குகளையும் பொருட்படுத்தாது ஆராய்ச்சியாளர் பலரும் அலைந்து திரிந்து கண்டுபிடித்த பண்டைய நாகரிகங்களின் எச்சங்கள் ஏராளம். அவற்றிலிருந்து கொஞ்சமாவது நாமும் தெரிந்திருக்க வேண்டாமா? அதனாற்றான் அவ்வாறான செய்திகளை அடுத்த பதிவிலிருந்து தீந்தமிழில் தர விழைகிறேன்.